குமரியில் நேற்று 40 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. சில பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சமூக விலகலில் சிக்கல் ஏற்பட்டது.
கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 69 நாட்களுக்கு பின்னர் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் அரசு பஸ்கள் ஓட தொடங்கியது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை ஒரு மண்டலமாக அறிவித்து, பஸ்கள் இயக்கப்பட்டன.

குமரியில் முதல் நாள் 30 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்துக்குள்ளும், வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வெளிப்புற பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

திருநெல்வேலிக்கு செல்லும் பஸ்களில் மட்டும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. திருநெல்வேலியில் இருந்து வரும் போது, ஆரல்வாய்மொழி அருகே பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதால், பஸ்கள் வருவதில் 2 மணி நேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் ஆகிறது.

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக பஸ்கள் இயக்கம் காலை 6 மணிக்கு துவங்கியது. திருநெல்வேலிக்கு அதிக பயணிகள் இருந்ததால், பஸ்களின் எண்ணிக்கை 3-ல் இருந்து 15 ஆக அதிகரிக்கப்பட்டது. அரசு ஊழியர்களும், மருத்துவ பணியாளர்களும் தனியாக பஸ்களில் சென்றனர்.

மணக்குடி, ராஜாக்கமங்கலம் துறை, கருங்கல், கடுக்கரை, சீதப்பால் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் டவுண் பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் நாளில் 180 பஸ்களும், நேற்று 225 பஸ்களும் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் எண்ணிக்கை நேற்று அதிகமாக இருந்தது. சரியான நேரத்துக்கு பஸ் கிடைக்காமல் பல மணி நேரம் பயணிகள் காத்திருந்தனர். ஒரு பஸ்சில் 25 முதல் 30 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இருவர் இருக்கையில் ஒருவர், 3 பேர் இருக்கையில் 2 பேர் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த நடைமுறை பல பஸ்களில் கடைபிடிக்கவில்லை என கூறப்படுகிறது. சில பஸ்களில் 40 பேர் வரை மொத்தமாக அமர்ந்து பயணித்ததாக தெரிகிறது.