தூத்தூர் பகுதியில் ஏற்கனவே 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே கிராமத்தில் உள்ளவர்களுக்கு தினமும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் தூத்தூர் கிராமத்தில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் வீடு வீடாக சளி, மாதிரி பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புனித தோமையார் மறைவட்ட ஆலயத்தில் ஊராட்சியின் 7, 8, 9, 10-ம் வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு சளி மாதிரி பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 200 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டன. இதில் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, முன்சிறை வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பினிஸ் ஜோசப், தூத்தூர் பங்குத்தந்தை சூசைநாயகம் உள்ளிட்டோர் நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி உள்ளனர்.