கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் 2 நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கருங்கல் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வரும் 49 வயது வியாபாரி, காய்கறி கொள்முதலுக்கு மதுரைக்கு அடிக்கடி சென்று வருவார். கடந்த ஒருவாரமாக நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் கருங்கல் பேரூராட்சி சார்பில் அவரது காய்கறி கடை மூடப்பட்டது. மேலும் நேற்று மதியம் முதல் காய்கறி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இன்று வழக்கம்போல் சந்தை செயல்படும் என்று பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுபோல் தேவிகோடு பகுதியில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் குறும்பனையை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கும் தொற்று உறுதியானது.தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் வெள்ளியாவிளை பகுதியை சேர்ந்த ஊழியர், மதுரையில் சர்வே துறையில் வேலை பார்த்து வரும் மாத்திரவிளையை சேர்ந்த அரசு ஊழியர் ஆகிய இருவருக்கும் ஆரல்வாய்மொழியில் சளி மாதிரி எடுத்து பரிசோதனையில் தொற்று உறுதியானது.