கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக அனைத்து நாடுகளையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது இந்த வைரஸ் பெருந்தொற்று. இதில் தற்போது வரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் முழுவதும் திணறி வருகின்றன என்பது தான் நிதர்சனமான உன்மையாகும். இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்த முதல் மாநிலமான கேரளாவில் முழுமையாக பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாம் நிலையாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இருப்பவர்கள் தற்கொலை செய்துக்கொண்டு வரும் சம்பவமும் பெரும் அதிர்ச்சியை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.
இது தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நிலவி வருகிறது என்பது தான் வேதனை அளிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணத்தினால் ஊரடங்கில் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்தபடியே இருக்கின்றனர். குறிப்பாக அவர்களுக்கு வேலை வாய்ப்பு, வருமானம் என்பது கேள்விக்குறியாகி தான் உள்ளது. அதனால் மத்திய மாநில அரசுகளின் உதவியை மட்டுமே அவர்கள் எதிர்பார்த்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மன உலைச்சல் அடைந்து வருகின்றனர் என்பது தான் வெளிச்சத்திற்கு வராத மறைமுக உன்மையாக இருந்து வருகிறது.

இதேப்போல் கொரோனா தொற்றால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழலில், அதன் அச்சத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் உயர்ந்து தான் வருகிறது.

தொற்று ஏற்பட்டுவிட்டால், தன்னால் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்களோ என்ற பயத்தில் பலர் தற்கொலை செய்கின்றனர். இதற்கு வசதி படைத்தவர்களும் விதிவிலக்கல்ல. அதற்கு மன அழுத்தம் மட்டும் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுகுறித்து மருத்துவ வல்லுனர்களும் பல்வேறு விவரங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். மன அழுத்தம்: இந்தியாவில் கொரோனா வைரஸ் நுழைந்த பிறகுதான், இந்த மன அழுத்தம் மக்களிடம் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, உலக மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதத்தினருக்கு மேலாக இந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக மன அழுத்தத்தால் ஆண்களை விடப் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் உள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்தில் உள்ளது. முன்கூட்டிய மரணத்துக்கான காரணங்களில் 10வது இடத்தில் மன அழுத்தம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்கொலைக்கும் மன அழுத்தத்துக்கும் மிக நெருங்கிய தொடர் உண்டு. உதாரணமாக கூற வேண்டுமானால் உலகில் ஒரு நிமிடத்துக்கு இருவருக்கு மேலாக இந்த மன அழுத்தத்தினால் தானாகவோ அல்லது தற்கொலை செய்து கொண்டோ உயிர் இழப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

நோயே போனாலும் எண்ணிக்கை அதிகமாகும்

மன அழுத்த நோய் நாளடைவில் மக்களை மனநோயாளியாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. இதனால், கொரோனா பிரச்னை ஒய்ந்த பிறகு, பல நாடுகளில் மனநோயாளியாக மாறியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா முதலிடம்

உலகளவில் அமெரிக்காவே அதிக மன அழுத்தமுள்ள மக்களை கொண்ட நாடாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கொலம்பியா, உக்ரைன், நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகியவை உள்ளன. ஜப்பான், நைஜீரியா, சீனா ஆகியவை பாதிப்பு குறைந்தவையாக இருந்தன. ஆனால், கொரோனா தொற்றுக்குப் பிறகு அங்கும் மனஅழுத்த நோய் அதிகமாகி விட்டது.