குளச்சல் மீன் பிடித்துறைமுகம், அந்த பகுதியில் உள்ள கொட்டில்பாடு, புதூர், சைமன்காலனி, வாணியக்குடி, குறும்பனை உள்ளிட்ட சுமார் 10 மீனவ கிராமங்கள் அதனை சுற்றியுள்ள சிறு கிராமங்களை சேர்ந்த, மீனவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.
இத்துறைமுகத்தில் கேரளாவை சேர்ந்த மீன்பிடி படகுகளும், குளச்சல் மேலாண்மை சங்கத்தை சேர்ந்த 163 விசைப்படகுகளும், சங்கத்தை சாராத விசைப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த துறைமுகத்தில் படகு அணையும் தளத்தில் சுமார் 30 விசைப்படகுகள் மட்டும் நிறுத்துவதற்கு வசதி உள்ளது.

இதில் நாளொன்றுக்கு 20 விசைப்படகுகள் மட்டுமே தாங்கள் கொண்டு வந்த மீன்களை வர்த்தகம் செய்யமுடியும். தற்போது, 200 க்கும் அதிகமான விசைப்படகுகளும், 400 க்கும் அதிகமான நாட்டுப் படகுகளும், இத்துறைமுகத்தின் வாயிலாக, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன.

வெளிமாநிலத்தில் இருந்தும், அதிகளவில் மீன்பிடி படகுகள் இங்கு வருவதால் இடநெருக்கடி அதிகமாக ஏற்படுகிறது. எனவே, குளச்சல் மீன்பிடி துறைமுகத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டுமெனவும், விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து குளச்சல் பங்குதந்தை மரியசெல்வன், விசைப்படகு சங்கத்தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் அந்திரியாஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள் இந்த கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்தை நேற்று நேரில் சந்தித்து, வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களிடம், தமிழக முதல்வர் கவனத்திற்கு கோரிக்கையை எடுத்து சென்று, அப்பகுதி மீனவ மக்களின் சிரமங்களை களைவதற்கும், துறைமுக விரிவாக்கம் செய்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

மேலும் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் படகனையும் தளம் உள்ளிட்ட வசதி ஏற்படுத்திட ரூ. 15.17 கோடியை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளி அடுத்தவாரம் கோரப்படவுள்ளது. இதில் மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மீனவர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.