குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
டெல்லியில் இருந்து ரெயில் மூலமாக மதுரை வந்து பின்னர் நாகர்கோவில் வந்த ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதேபோல் சென்னையில் இருந்து வாடகை கார் மூலமாக திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு ரயிலில் வந்த இரண்டு பேரை ரயில் நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

நமது மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து தற்போது 30 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. பேருந்தில் பயணம் செய்யும் போது மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு முககவசங்களையும் அணிந்திருக்க வேண்டும்.

கூடுமானவரை பேருந்தின், கைப்பிடி உள்ளிட்ட பாகங்களை தங்கள் கைகளால் தொடுவதை தவிர்த்து தங்களை தாங்களே காத்துக்கொள்ள வேண்டும். சானிடைசர் மூலம் அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

முககவசம் அணியாமல் நேற்று பொது வெளியில் நடமாடிய 302 பேருக்கு ரூ. 30 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் மொத்தம் 443 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெளியூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 4,553 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.