கொரோனா வைரஸ் தாக்குதல் பாதுகாப்பு பணியில் தன்னலம் கருதாமல் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரின் பணி மெச்சத்தக்கதென பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
கடந்த 73 நாட்களுக்கும் மேலாக உலக மக்கள் மட்டுமின்றி இந்திய மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மக்களை காக்கும் விதத்தில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு 144 தடை உத்தரவை அமல்படுத்தியது.

இதனால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் நிறுத்தப்பட்டு மூடப்பட்டன. ஒட்டுமொத்தமாக ரயில்வே மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், ராணுவத்தினர், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

மார்ச் மாதம் 24 ஆம் தேதி தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் விழித்திரு தனித்திரு விலகியிரு என்ற மையக்கருத்துக்களுடன் சமூக இடைவெளியுடன் வாழத் தொடங்கினார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் ஒலி அவ்வப்போது ஒலித்துக்கொண்டே இருக்க மக்கள் எப்படியாவது அந்த வைரஸ் தொல்லையை தூக்கி எறிய வேண்டும் என்ற சிந்தனையோடு வாழத் தொடங்கினர். மக்களை காக்கும் விதத்தில் களமிறங்கியுள்ள காவல்துறையினருக்கு ஆதரவாக ஊர்க்காவல் படையினர், தன்னார்வ தொண்டர்கள் களமிறக்கப்பட்டனர். இதனால் மார்க்கெட் சாலையோரம் மக்கள் கூடும் நிலை தவிர்க்கப்பட்டது. இதனால் தடை உத்தரவில் இருந்தது இதுவரை பல்வேறு ஊரடங்கு தளர்வு இருந்தாலும் மக்கள் போக்குவரத்து இல்லாத பகுதிகள் இன்னும் உள்ளது. இந்த காலகட்டத்தில் மக்களை காக்கும் விதத்தில் காவல்துறையினர் இரவு பகல் என பாராமல் அயராமல் உழைத்து வருகின்றனர்.

தக்கலை காவல்துறை சரகத்தில் ஆறுகாணி, பளுகல், களியல், அருமனை,பேச்சிப்பாறை, கடையாலுமூடு, குலசேகரம், திருவட்டார் ,மார்த்தாண்டம் கீரிப்பாறை, கொற்றிக்கோடு, தக்கலை ஆகிய இடங்களில் மகளிர் மற்றும் போக்குவரத்து உட்பட 15 காவல் நிலையங்கள் உள்ளன .இந்தக் காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 425 பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனவைரஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ஆம் தேதி முதல் நேற்று ஜூன் நான்காம் தேதி வரை தொடர்ந்து 73 நாட்கள் கண்ணுறக்கமின்றி மக்களைக் காக்கும் விதத்தில் கடமை உணர்வோடு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் தக்கலை சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் வழிகாட்டுதலில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இரவு பகல் என பாராமல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் நோயின் தாக்கம் அதிகமாக இல்லை மேலும் வழிப்பறிக் கொள்ளை, திருட்டு ,விஷச் சாராயம் விற்பனை ஆகியவை முடிந்த அளவு தவிர்க்கப்பட்டது . தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையில் தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த கொடூர வைரஸ் பாதுகாப்பு பணியை திறம்பட சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் ,சிதம்பர தாணு, சுந்தர்ராஜ் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மனம் நோகாமல் உழைத்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஊர்காவல் படையினர் களத்தில் உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்வான நிலையில் சாலைக்கு வரும் வாகனங்கள் கணக்கிலடங்காமல் உள்ளது. வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் வரவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இருந்தாலும் வைரஸ் அழுத்தத்திலிருந்து மக்களை காக்க காவல்துறையினர் ஓயவில்லை. சுற்றுவட்டார பொதுமக்களை கொரோனா வைரஸ் நோய் தொற்றிக் கொள்ளக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் அன்றும் இன்றும் என்றும் அவர்கள் பணி தொடரும் என்பதில் ஐயமில்லை. அவர்களது பணி மெச்சும்படியாக உள்ளது. ஆக மொத்தத்தில் கடந்த 73 நாட்களாக தன்னலம், தன் குடும்பம் என பாராமல் இரவும் பகலும் மக்கள் மத்தியில் உருவாகும் கொரோனா வைரஸ் நெருக்கடியை தவிர்க்க பாதுகாத்து வரும் அந்தக் காவல் தெய்வங்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.