குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் தற்போது ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இதையடுத்து நேற்று பங்குபேரவை அவசர கூட்டம் பங்குதந்தை மரியசெல்வன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் வால்டர், பொருளாளர் மரியரூபன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குளச்சலில் இருந்து கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து குளச்சலில் நேற்று கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவைகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதுபோல் குறும்பனை, முட்டம் மீனவர் கிராமங்களிலும் பங்குதந்தையர்கள் பங்கு பேரவை கூட்டம் கூட்டி கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என முடிவு செய்துள்ளனர்.
இதனால் குளச்சல் வட்டாரத்தில் உள்ள சைமன்காலனி, வாணியக்குடி, கொட்டில்பாடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லாது. இந்த பகுதி மீனவர்கள் தங்கள் மீன்பிடி உபகரணங்களை குளச்சலில் வைத்திருப்பார்கள் என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மீண்டும் அவர்களாகவே தங்களுக்குள் சுய ஊரடங்கு ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். ஒருசில கிராமங்களில் இது குறித்த முடிவு எடுக்க இன்று பங்கு பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது.






0 Comments