மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்களுக்கு அத்தியாவசிய வங்கிப்பணி மேற்கொள்வது நிவாரணம் மற்றும் தினப்படி வழங்க வேண்டும் என குமரி மாவாட்ட கூட்டுறவு நகை மதிப்பீட்டார்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகளால் 25-03-2020 முதல் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணி பரிமாற்றத்தை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றிவரும் நகை மதிப்பீட்டாளர்கள் பணி நிரந்தரம் இல்லாமலும், மாத ஊதியம் இல்லாமலும் இந்த ஊரடங்கு காலத்தில் நகை மதிப்பீடு கட்டணம் இல்லாமலும் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் போதிய வருமானமின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளவும், உணவின்றி வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் தங்களது மாவட்ட எல்கைக்கு உள்பட்ட கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ. 15 ஆயிரம் நிவாரணத் தொகையும், தினமும் வங்கி பணிக்கு வந்து செல்ல, இதர மாவட்டங்களில் வழங்குவது போல் ரூ.300 படி வழங்கும்படியும் தங்கள் உரிய வழிகாட்டி ஆணை பிறப்பித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, குமரி மாவட்ட கூட்டுறவு நகை மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கே.தங்க மோகனன், செயலாளர் குணசீல பதி, பொருளாளர் சிதம்பரநாதன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் அந்தோணி, சங்க துணைத்தலைவர் பழனி சுரேஷ், துணை செயலாளர் சுப்பிரமணி, சுடலையாண்டி, அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.