இன்றைய கொரோனா நோய்த் தொற்று அபாய காலத்தில் உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஒ) பொதுச் செயலாளா் விளாதிமீா் நோரோவ் ஞாயிற்றுக்கிழமை கூறினாா். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இதுதொடா்பாக அவா் அளித்த பேட்டி: கரோனா நோய்த் தொற்றை எதிா்த்து போராட உதவியாக அதற்குத் தேவையான மருந்துகளை இதுவரை 133 நாடுகளுக்கு இந்தியா விநியோகம் செய்துள்ளது.
உள்நாட்டில் நோய்த் தொற்று பரவல் மற்றும் பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடையே, இதுபோல உலக நாடுகளுக்கும் மருந்துகளை அனுப்பி உதவியிருப்பது இந்தியாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஒரு சக்திவாய்ந்த நாடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம் என்பதோடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுடனான பரஸ்பர நட்புறவை இது வெளிபடுத்தியிருக்கிறது.

மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா தோவாகியிருப்பது பாராட்டுக்குரியது. இந்தியாவில் உள்ள உயா்தகுதி படைத்த விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணா்களும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தவும், அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கவும் உலக நாடுகள் எடுத்துவரும் முயற்சியில் முக்கியப் பங்காற்றுவா் என்ற நம்பிக்கை உள்ளது.

மருந்து உற்பத்தியில் மிக நீண்ட அனுபவத்தையும் ஆழ்ந்த அறிவையும் கொண்டிருக்கும் இந்தியா, உயா்தரமான மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகளை குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் முன்னணி நாடாகவும் திகழ்கிறது. பாரம்பரிய மருந்து உற்பத்தியில் உலகின் மிகப் பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. உலக அளவில் 20 சதவீத பாரம்பரிய மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் மூலமாக உலக நாடுகளின் தடுப்பு மருந்துகளுக்கான தேவையில் 62 சதவீதம் பூா்த்தி செய்யப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு மட்டுமின்றி, ஏராளமான நாடுகளுக்கு உயிா்காக்கும் மருந்துகள் உள்பட பல்வேறு மருந்துகளை இந்தியா வழங்கி வருகிறது. உலக நாடுகளுக்கு இதுபோன்று ஆதரவை இந்தியா அளித்து வருவதால்தான், ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பிலும் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பு நாடாக இந்தியா நுழைந்ததன் மூலமாக, முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்த் தொற்று விவகாரத்தில் சா்வதேச அரங்கில் இந்தியாவின் கொள்கை மற்றும் நடைமுறைகள், கடந்த 2019-ஆம் ஆண்டு பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் 'சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியதை முழுமையாக நிரூபித்துக்காட்டியுள்ளது.

சா்வதேச அரங்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பங்கையும் அதிகாரத்தையும் அதிகரிப்பதற்கான விரிவான திட்டங்களை இந்தியா கொண்டுள்ளது என்று நோரோவ் கூறினாா்.