குமரியில் கொரோனா பாதிப்பு 219 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து வருபவர்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது தவிர தூத்தூரில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே தூத்தூரில் இளம்பெண் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று முன்தினம் தூத்தூரை சேர்ந்த பங்குத்தந்தை பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று தொற்று உறுதியான 10 பேரில் 4 தூத்தூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஒருவர் அருமநல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமி. மற்றொருவர் காட்டாத்துறை பகுதியை சேர்ந்த 42 வயது பெண், நாகர்கோவில் ஐஎஸ்ஆர்ஓ காலனியை சேர்ந்த 27 வயது வாலிபர். இவர்கள் தவிர குலசேகரம் கான்வென்ட் சந்திப்பை சேர்ந்த 36 வயது ஆண், அருமனை மாத்தூர் கோணத்தை சேர்ந்த 38 வயது ஆண், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமை வார்டில் இருந்து வரும் 58 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் நேற்று மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே சிகிச்சையில் இருந்த 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து 87 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 39 பேர் பெண்கள் ஆவர்.

குமரி மாவட்டத்தில் கட்டுபாடுகள் தளர்வால், மக்கள் சர்வசாதாரணமாக உலா வருகிறார்கள். கடைவீதிகளில் கூட்டம் காணப்படுகிறது. மீன் மார்கெட்டுகளில் கூட்டம் அதிகஅளவில் உள்ளது. இங்கு சமூக விலகல் கட்டுபாடுகள் எதுவும் இல்லை. தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தில் மட்டும் 2 ஆயிரம் பேர்வரை திரண்டனர். காட்டுப்பாடுகள் ஒழுங்கான முறையில் இல்லாததால் பாதிப்பு அதிகமாக வருவதாக தெரிகிறது.