கன்னியாகுமரி மாவட்டத்தில் கறிக்கோழி விலை சரிந்துள்ளதால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தபடி கறிக்கோழிகளை வாங்கி சென்றனர். கொரோனா அச்சுறுத்தல் துவங்கி நேற்று 21ஆம் தேதியுடன் 90 நாட்கள் நிறைவு பெற்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் துவக்கத்தின்போது கறிக்கோழி ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையானது.
அப்போது ஏதோ காரணத்திற்காக பயனாளிகள் கறிக்கோழி அதிகமாக விரும்பி வாங்கவில்லை. இதனால் பண்ணை முதலாளிகள் கறிக்கோழி கடை வியாபாரிகள் மிகவும் கவலை அடைந்தனர். இந்நிலையில் அழுகிய மீன்கள் சந்தைக்கு வந்ததால் சுகாதாரத் துறையினரின் நடவடிக்கையால் மீன் விற்பனையும் நலிவடைந்தது. நாட்கள் செல்லச்செல்ல கறிக்கோழி ஒரு கிலோ ரூபாய் 174 வரை உயர்ந்தது.

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை உள்ள பகுதிகளான நாகர்கோயில், இடலாக்குடி, பூதப்பாண்டி, பார்வதிபுரம், வில்லுக்குறி, கண்டன்விளை, திங்கள்சந்தை, கருங்கல், புதுக்கடை, குளச்சல், கிள்ளியூர், பள்ளியாடி, சாமியார் மடம், இரவிபுதூர்கடை, மார்த்தாண்டம் , குழித்துறை, கொல்லங்கோடு, புத்தன்துறை, களியக்காவிளை, குலசேகரம், திருவட்டார், சித்திரங்கோடு, குமாரபுரம், முட்டை காடு, வெள்ளரிஏலா, தக்கலை உட்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி கடைகள் உள்ளன.

இந்த கடைகளில் கடந்த வாரத்தை விட கறிக்கோழி விலை சரிந்தது. குறிப்பாக ஒரு கிலோ கறி கோழி, ரூபாய் 90 முதல் 98 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட கறிக்கோழி அதிகமாக செலவானது. சில கடைகளில் கறிக்கோழி கிடைக்காமல் மக்கள் திரும்பி சென்றனர். ஆக மொத்தத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு கறிக்கோழி விலை குறைவு மகிழ்ச்சியை அளித்தது. சமூக இடைவெளியுடன் கறிக்கோழிகள் வாங்கிச் சென்ற பயனாளிகள் மிகவும் மகிழ்ந்துள்ளனர்.