குமரி மாவடத்தில் பங்குதந்தை உள்பட மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14-ம் தேதி அன்று வெறும் 16 பேர் என இருந்த பாதிப்பு எண்ணிக்கை சுமார் 2 மாதங்களில் 200 ஐ தாண்டியுள்ளது. சென்னை, மும்பை மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனதெரிகிறது.

நாள்தோறும் சுமார் 1500 பேருக்கு மேல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 17-ம் தேதி 21 பேரும், 18-ம் தேதி 7 பேரும், 19-ம் தேதி 12 பேரும் என 3 நாட்களில் 40 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மொத்த பாதிப்பு 200 ஐ தாண்டி உள்ளது. மாவட்டத்தில் வல்லன்குமாரவிளை, மறவன்குடியிருப்பு, தூத்தூர், கருங்கல் உள்ளிட்ட 9 பகுதிகள் தடை செய்யப்பட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களில் இரு பெண்கள், தங்களது குழந்தைகள் சிகிச்சையில் இருப்பதால் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. இதனால் இவர்கள் 2 பேர் தவிர, 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதுதவிர நேற்று காலையில் மட்டும் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் தூத்துரில் உள்ள பங்கு தந்தை ஆவார். தற்போது நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.