தையல் கலைஞர்களுக்கு நலவாரிய ஓய்வூதியம் கிடைக்காமல் இருப்பதை வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது தமிழ்நாடு தையல் கலைஞர்கள் நல வாரியத்தில் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்துள்ளனர். இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களாக உள்ளனர். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் வேறு வருமானமில்லாத வயது முதிர்ந்த ஏழை தையல் கலைஞர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கோவிட் 19 தொற்று தடுப்பு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மேலும் மிகவும் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஓய்வூதியம் பெறும் தையல் கலைஞர்களுக்கு வேறு எந்தவிதமான நிவாரண பொருட்களோ, நிவாரண உதவிகளோ அரசால் செய்யப்படவில்லை.

எனவே மிகவும் சிரமப்பட்டு வரும் தையல் கலைஞர்களுக்கு 2019 ஆகஸ்ட் மாதம் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பணத்தை நிலுவைத்தொகையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை ஓய்வூதியர்களான வயது முதிர்ந்த தொழிலாளர்களுக்கு கோவிட் 19 பேரிடர் கால நிவாரண பொருட்களும் நல உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.