இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியா' எனும் பெயரை 'இந்துஸ்தான் அல்லது பாரத்' என்று மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதையும் இதனை கோரிக்கை மனுவாகக் கருதி மத்திய அரசு முடிவு எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்திருப்பதையும் சுட்டிகாட்டியுள்ளார். இதன் பின்னணியில் பல ஐய்யபாடுகள் எழுவதாக தெரிவித்துள்ள வைகோ, இந்திய அரசியல் நிர்ணய சபையில், 'இந்துஸ்தான்' என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்தது, மறைக்க முடியாத வரலாறு என்றும் கூறியுள்ளார்.

தற்போது நாட்டின் பெயரையே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும், அதற்கு உச்சநீதிமன்றத்தைத் துணைக்கு அழைப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமெனில், 'இந்திய ஐக்கிய நாடுகள் என்று மாற்றுவதுதான் பொருத்தமாகவும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பதாகவும் அமையும் என கூறியுள்ள வைகோ அதை விடுத்து, தங்கள் விருப்பம் போல் நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.