அடுத்தமாதம் மகள் திருமணம் நடக்க இருந்த நிலையில் கால்வாயில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தாழக்குடி அருகே நடந்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தாழக்குடி அருகே சந்தைவிளை, பார்வதிபுதூரை சேர்ந்தவர் மருதப்பன் என்கிற சாத்தான் (வயது55), தொழிலாளி. இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. மூத்த மகள் தேவிஸ்ரீக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது. 2-வது மகள் மகேஷ்வரி சென்னையில் ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
தாழக்குடி பகுதியில் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் செல்கிறது. நேற்று முன்தினம் கால்வாயின் மறுகரையில் உள்ள ஒரு கடைக்கு மருதப்பன் சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.
நேற்று காலையில் மருதப்பனின் பிணம் கால்வாயில் கிடப்பதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். அவர் கால்வாயை கடக்க முயன்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராபர்ட் செல்வ சிங், பிரசாந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மருதப்பனின் பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்த மாதம் மகளின் திருமணம் நடக்க இருந்த நிலையில் தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






0 Comments