குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ள நிலையில் பெண் ஒருவர் நேற்று பலியானார்.

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டு இருந்த நிலைமாறி, தற்போது கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தூத்தூர், சின்னத்துறை, சின்னமுட்டம், அருமநல்லூர், சீதப்பால், தேவிக்கோடு, வள்ளவிளை, குலசேகரம், சுசீந்திரம் ஆஸ்ரமம், பாகோடு, என மாவட்டம் முழுவதும் பரவல் அதிகரித்த நிலையில் உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளது. பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் உறவினர்கள், குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிருகுழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி, மேலும் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது. 3 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஏற்கனவே 3 டாக்டர்கள் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் நேற்று நாகர்கோவில் பிரபல தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தக்கலையில் தனியார் மருத்துவமனை டாக்டருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவரது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு நாகர்கோவிலில் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட மூதாட்டி பலியாகி இருந்தார். அவரது சளி மாதிரி சேகரிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.






0 Comments