திருவிதாங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் வைரஸ் தொற்றுக்குள் சிக்கி உள்ளதால் ஊர்மக்கள் கவலை அடைந்த நிலையில் தூய்மை பணி விரைவாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஊர்களை கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில் முத்தலக்றிச்சி கிராம பஞ்சாயத்து, முளகுமூடு, திருவிதாங்கோடு, விலவூர் உட்பட பேரூராட்சிகளிலும் பத்மநாபபுரம் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. குறிப்பாக, மக்கள் பணியை திறமையுடன் நடத்தி வந்த முளகுமூடு டவுன் பஞ்., செயல் அலுவலரையும் வைரஸ் விட்டு வைக்கவில்லை.

இந்த பஞ்சாயத்தில் 9 ஊழியர்கள் உட்பட 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிதாங்கோடு டவுன் பஞ்., உட்பட்ட கேரளபுரத்தில் 2 பேர் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் இருவரும் வீடு திரும்பினர். பரைக்கோடு ஆசாரி விளையில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர், பாட்ட விளை, பனைவிளை, வட்டம் ஆகிய ஊர்களில் தலா ஒருவரும், வடலிவிளையில் இரண்டு பேர் உள்பட 10 பேர் சிக்கி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஞ்., செயல் அலுவலர் வினிதா ஆலோசனைப்படி சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஊர்கள்தோறும் துப்புரவுப்பணியுடன் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.