ராஜாக்கமங்கலம் அருகே பாம்பன்விளை பகுதியை சேர்ந்தவர் அருண் ஜெனிஸ். இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லை. இதனால் ஆல்ட்ரின் ரியாஸ் (வயது 4) என்ற ஆண் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் அருண் ஜெனிஸின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நிறைமாத கர்ப்பிணியான அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

கடந்த வாரம் குழந்தை பிறந்தது. தற்போது ஆஸ்பத்திரியில் வைத்து அருண் ஜெனிஸ் மனைவியை கவனித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் குழந்தை ஆல்ட்ரின் ரியாஸை தாத்தா, பாட்டி கவனித்து வந்தனர். நேற்று மதியம் குழந்தை வீட்டு வளாகத்தில் பந்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது தரைமட்ட தண்ணீர் தொட்டி மூடப்படாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் பந்து உருண்டு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளது. சிறிது நேரம் கழிந்து தாத்தா, பாட்டி இருவரும் பேரனை தேடியபோது காணவில்லை. தொடர்ந்து தேடியபோது ஆல்ட்ரின் ரியாஸ் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து கிடந்ததை கண்டு இருவரும் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அருண் ஜெனிசும் குழந்தையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.