சாத்தான்குளம் தந்தை- மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்யப்படதில் கோவில்பட்டி சிறையில் இருவரும் உயிரிழந்தனர். இவ்வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜா, முருகன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிபிஐ, இவ்வழக்கை சந்தேக மரணம் என்பதில் இருந்து கொலை வழக்காக மாற்றி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சார்பு ஆய்வாளர் ரகு கணேஷூம், 4வது குற்றவாளியாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொலை, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், தடயங்களை அழித்தல் உட்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குமாரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நேரில் ஆஜராகி ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜா, முருகன் ஆகிய 5 பேரையும் 5 நாட்கள் சி.பி.ஐ காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹேமந்த்குமார் 5 பேரையும் நாளை 11 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.