குமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத், சென்னை கிரைம் பிராஞ்ச் சிஐடி எஸ்பியாக (பிரிவு2) மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் திருப்பூர் மாநகர சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து, க்ரைம் துணை கமிஷனர் பத்ரி நாராயண், குமரி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய எஸ்பி பத்ரி நாராயண், மாமல்லபுரம் ஏஎஸ்பியாக இருந்து பின்னர் பதவி உயர்வு மூலம் கடந்த நவம்பரில் திருப்பூரில் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளை எஸ்பி ஸ்ரீநாத் சந்தித்து பேசினார். ஏஎஸ்பி க்கள், ஏடிஎஸ்பிக்கள் மற்றும் தனிப்படையினர் பங்கேற்றனர்.

அப்போது குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலை நாட்ட தனக்கு ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றிய அனைவருக்கும் எஸ்பி ஸ்ரீநாத் நன்றி தெரிவித்தார். பின்னர் எஸ்பி பேசியதாவது:-

குமரி மாவட்டத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். குமரி மாவட்ட மக்கள், மிகவும் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கு உள்ள நேரத்தில், காவல்துறையின் உத்தரவுகளை மதித்து நடந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தல் மிக அமைதியான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இங்குள்ள அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் சிறப்பான ஒத்துழைப்பு தந்தனர். குமரி மாவட்டத்தில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். பல்வேறு வழக்குகளில் தீவிர நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றினர்.

குறிப்பாக எஸ்ஐ வில்சன் வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை முக்கியமானதாகும். இந்த வழக்கில் ஆயுதங்கள் பறிமுதல் செய்ததை பெரிய விசயமாக கருதுகிறேன். இதற்கு அடுத்தப்படியாக கோட்டார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவாகி உள்ள காசி மீதான வழக்குகளிலும் வேகமான விசாரணை நடைபெற்றது. இன்னும் பல வழக்குகள் இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் துப்பு துலக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் பணியாற்றியது, புதிய அனுபவத்தை தந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.