குமரி மாவட்டத்தில் கொத்து, கொத்தாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று மாநகராட்சி சுகாதார பயிற்சி மாணவர் உள்பட 89 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது குமரி மாவட்டத்தில் காய்கறி மார்க்கெட்டுகள், மீன் சந்தைகளில் கொரோனா புகுந்த பின்,பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஏப்ரல் 14ம் தேதி வெறும் 16 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை,சுமார் 3 மாதங்களில் 1300 ஐ கடந்துள்ளது. கொத்து, கொத்தாக நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நாகர்கோவிலில் வடசேரி, கோட்டாறு பகுதிகளில் தினமும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே திக்குறிச்சி, கழுவன்திட்டை, தூத்தூர், வாணியக்குடி பகுதிகளில் அதிகம் பேர் பாதிப்பட்ட நிலையில் தற்போது கோழிவிளை அகதிகள் முகாமில் தொற்று வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே கடந்த 8-ம் தேதி 105 பேர் பேரும், 9-ம் தேதி 103 பேரும், 10-ம் தேதி 114 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி 89 பேரும் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் நேற்று 10 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில்ஒருவர் நாகர்கோவில் மாநகராட்சியில் சுகாதார பயிற்சி பெறும் மாணவர் ஆவார்.

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை நிரம்பியதால், தற்போது கல்வி நிறுவனங்களில் உள்ள கோவிட் தனி கவனிப்பு மையங்களில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரர் மூலம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஒவில் பணியாற்றுகிறார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரது சகோதரருக்கும் நடந்த பரிசோதனையில் தொற்று உறுதியானது.