கேரளாவில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானத்தால் 8 பேர் மறுவாழ்வு பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொட்டரக்காரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுஜித்(27). இவர் ஜுலை 17 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுஜித் பின் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார்.
இந்த நிலையில், அனுஜித்தின் குடும்பத்தார் அவரின் இதயம், சிறுநீரகம் மற்றும் கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.
இதனை அறிந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் அனுஜித்தின் இறப்பிற்கு ஆறுதல் தெரிவித்ததுடன் உறுப்பு தானம் செய்ய முன்வந்த அவரின் உறவினர்களின் செயல் முன்மாதிரியானது என பாராட்டினார்.
பின் மாநில முதல்வர் பினராய் விஜயனின் அறிவுறுத்தலின் பேரில் மாநில அரசின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் அனுஜித்தின் உடல் உறுப்புகள் கொச்சினுக்கு கொண்டு வரப்பட்டு உரிய நபர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.இதன் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றனர். அனுஜித் குடும்பத்தாரின் இந்த முன்மாதிரியான நடவடிக்கைக்கு பல தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.






0 Comments