உத்தரப்பிரதேச மருத்துவமனை ஒன்றில் ஸ்டிரெச்சர் தள்ளிச் செல்ல வார்டுபாய்கள் லஞ்சம் கேட்டதால் அம்மாவுடன் இணைந்து தாத்தாவின் ஸ்டிரெச்சரை சிறுவன் தள்ளிச் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வார்டுபாய்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ஸ்டிரெச்சரை தள்ளிச் செல்ல வேண்டும் என்றால் லஞ்சம் தர வேண்டும் என்று வார்டுபாய்கள் கூறியுள்ளனர். இதனால், முதியவரின் மகளும், பேரனும் சேர்ந்து ஸ்டிரெச்சரை தள்ளிக்கொண்டு சென்றனர். சிறுவன் ஸ்டிரெச்சரை தள்ளிக்கொண்டு சென்ற வீடியோ, புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இது பற்றி பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
சிறுவனின் தாய் பிந்து இது குறித்து கூறுகையில், “ஒவ்வொரு முறையும் ஒரு வார்டில் இருந்து வேறு இடத்துக்கு பரிசோதனை, அறுவைசிகிச்சைக்கு அழைத்துச் செல்லும்போது எல்லாம் வார்டு பாய்களுக்கு ரூ.30 லஞ்சம் தர வேண்டியிருந்தது. கடைசியில் என்னிடம் பணம் இல்லை என்று கூறியபோது ஸ்டிரெச்சரை தள்ளிச்செல்ல மறுத்தனர். அதனால், நானும் என் மகனும் ஸ்டிரெச்சரை தள்ளிச் சென்றோம்” என்றார்.
இதைக் கண்ட மாவட்ட மாஜிஸ்திரேட் சிறுவனின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு நடந்தது என்ன என்று விசாரித்துள்ளார். அதன் அடிப்படையில் அறுவைசிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த வார்டு பாய்களை தற்காலிக பணி நீக்கம் செய்யவும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.






0 Comments