குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிக வேகமாக பரவி வருகிறது. மே மாதம் வரை கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் அதிகரிக்க தொடங்கியது.

தற்போது காய்கறி, மீன் சந்தைகளில் தொற்று பரவியதன் காரணமாக உள்ளூரில் உள்ள மக்களை வேகமாக தாக்கி வருகிறது. நாள் தோறும் 80, 90 என இருந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 100 ஐ கடந்தது. மார்க்கெட்டுகளை மையமாக வைத்து பரவியதால், மளமளவென பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் இறந்துள்ளதால், மொத்தம் மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இறந்து போன இருவருக்கு பரிசோதனை அறிக்கை வரவேண்டி உள்ளது. குமரி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இடமில்லாமல் தற்போது வெளியே அமைந்துள்ள முகாம்களில் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர்.
நேற்று சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 114 பேர் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சப் இன்ஸ்பெக்டர் வடசேரி காவல்நிலையத்தை சேர்ந்தவர். ஏற்கனவே ஒருமுறை பரிசோதனையில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இரு நாட்கள் காய்ச்சல் இருந்ததால் மீண்டும் நடந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.
ஏற்கனவே வடசேரி காவல் நிலையம் மூடப்பட்டு இருந்த நிலையில், மேலும் ஒரு எஸ்ஐ பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மூடப்படும் நிலை வந்தது. இதனால் தற்போது பணியில் உள்ள போலீசாருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும் என தெரிகிறது.
நாள்தோறும் தொற்று வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், ஜூலை 15-ம் தேதிக்கு பின் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது. தற்போது கடைகள் அனைத்தும் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை குறைக்க மாவட்ட கலெக்டர் முடிவு செய்துள்ளார். மதியம் 2 மணியுடன் கடைகள் அடைக்கப்படும் என தெரிகிறது.
ஏற்கனவே வியாபாரிகள் கடைகளின் திறக்கும் நேரத்தை குறைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கட்டுபாடுகளை கடுமையாக்கி ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலையில் வரலாம் என தெரிகிறது.






0 Comments