குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் முகம்மது ரியாஸ் (வயது 38). இவர் சவுதி அரேபியாவில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து குமரிக்கு காரில் வந்தார்.
களியக்காவிளை சோதனை சாவடி வந்து கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி கொடுத்துவிட்டு, தனிமைப்படுத்துவதற்காக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி லாட்ஜுக்கு சென்றார்.

தான் கொண்டு வந்த சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களுடன் மாடிப்படி ஏறியவர், அறை கதவை திறந்து உள்ளே சென்றதும் மயங்கி கீழ விழுந்தார். இதை பார்த்ததும் லாட்ஜ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர் வந்து பரிசோதனை நடத்தியதில், மாரடைப்பு ஏற்பட்டு முகமது ரியாஸ் இறந்தது தெரியவந்தது.

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே இதற்குமுன் ஒரு முறை நெஞ்சுவலி வந்து சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. கன்னியாகுமரி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகமது ரியாசுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.