குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 103 பேர் பாதிக்கப்பட்டனர். நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பாதிப்பு வேகம் அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை 1300 ஐ கடந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:-
செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் காலனியை சேர்ந்த 60 வயது முதியவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தியேட்டரில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், கோட்டாரில் உள்ள ஒரு சைக்கிள் கடையில் காவலாளியாக வேலைக்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கடையின் முன் அவர் இறந்து கிடந்தார்.

கோட்டார் போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சளி பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.

குளச்சல் வாணியக்குடி பகுதியில் 75 வயது முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவர், திடீரென இறந்ததை தொடர்ந்து அவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சளி பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தாழக்குடி பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவருக்கு சளி மாதிரி பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 67 வயதுடைய அவரது சகோதரருக்கும் காய்ச்சல் இருந்ததால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரவில் திடீரென இறந்தார். (இவருக்கு பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை) கொரோனாவுக்கு பயந்து குடும்பத்தினர் யாரும் உடல் அருகில் செல்லவில்லை. பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து, உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவக்கல்லூரி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த 44 வயது இளைஞருக்கு ஏற்கனவே எலும்பு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. இவருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மதியம் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இதேபோல் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயது முதியவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படிருந்தார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வரும் நேற்று மாலை பலியானார். ஒரேநாளில் 4 பேர் அடுத்தடுத்து கொரோனாவுக்கு உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக இருந்துவந்த நிலையில், தற்போது 4 அதிகரித்து 10 ஆக உயர்ந்துள்ளது.