மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அமைச்சரவை நேற்று விரிவுப்படுத்தப்பட்டது; 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.மத்திய பிரதேச சட்ட சபைக்கு, 2018 நவம்பர் - டிசம்பரில் தேர்தல் நடந்தது. இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சுயேச்சைகள் ஆதரவுடன், மாநிலத்தில், 15 ஆண்டுகளுக்கு பின், காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல்வராக கமல்நாத் பதவியேற்றார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேசத்தில், 25 இடங்களையும் பா.ஜ., கைப்பற்றியது. இதன்பின், காங்., மேலிடம் மீது அதிருப்தியில் இருந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ஜோதிராதித்ய சிந்தியா, மார்ச் மாதம் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார். அவருடன், மத்திய பிரதேச காங்., - எம்.எல்.ஏ.,க்கள், 22 பேர், பா.ஜ.,வில் சேர்ந்தனர். இதையடுத்து, மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் இருந்த, காங்., ஆட்சி கவிழ்ந்து, சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி மீண்டும் அமைந்தது. அப்போது, முதல்வர் மட்டுமே பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், ஏப்ரல் மாதம், ஐந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். பா.ஜ.,வில் இணைந்த சிந்தியாவுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது.

தன்னுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு, மாநிலத்தில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, பா.ஜ., தலைமையிடம், சிந்தியா வலியுறுத்தினார். பா.ஜ.,வை சேர்ந்த பலரும், அமைச்சர் பதவியை எதிர்பார்த்தனர். இதனால், அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் அடைந்தது. இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, கட்சி மேலிடத்திடம், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், மத்திய பிரதேச அமைச்சரவை, நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

பா.ஜ., மூத்த தலைவரும், ஜோதிராதித்ய சிந்தியாவின் அத்தையுமான, யசோதரா ராஜே உட்பட, 28 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.போபாலில், கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், அமைச்சர்களுக்கு கவர்னர், ஆனந்திபென் படேல், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில், 20 பேர், கேபினட் அமைச்சர்களாகவும், எட்டு பேர், இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். புதிய அமைச்சர்கள், 28 பேரில், 12 பேர், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.