கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது பெற வரும் அக்டோபர் மாதம் 31 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, சமூக நலம் சத்துணவு திட்டத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்புரிந்து வரும் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் முகமாக அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறபித்து கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. அதன்படி தேசிய பெண் குழந்தை தினத்தில் பாராட்டு பத்திரமும், ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. வரும் ஜனவரி 2021 ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்கு உட்பட்ட தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பங்களை வரும் அக்டோபர் மாதம் 31 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உட்பட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம், நாகர்கோவில், தொலைபேசி எண் 04652 278404 என்ற முகவரியில் அக்டோபர் மாதம் 31 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்