குமரியில் நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
குமரி மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு ஏப்ரல் மாதம் வரை மிக குறைவான எண்ணிக்கையில் தான் இருந்து வந்தது. மே 2-வது வாரத்தில் இருந்து தொற்று அதிகரிக்க தொடங்கியது. கடந்த வாரம் வடசேரி, கோட்டார், அப்டா மார்க்கெட் மற்றும் குளச்சல், மார்த்தாண்டம் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட்களில் தொற்று பரவியதன் காரணமாக, தற்போது கொத்து கொத்தாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோழிவிளை அகதிகள் முகாமை கொரானா புரட்டி போட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் சுமார் 450 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை தினமும் 100 ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. வைரஸ் தாக்குதல் வளையத்தில் வரும் ஊர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் 119 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் கோட்டார் மார்க்கெட்டை மையமாக வைத்து மட்டும் 15 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள். நேற்று முன்தினம் 65 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று 161 பேர் புதியதாக பாதிக்கப்பட்டனர். இதில் 88 பேர் ஆண்கள், 58 பேர் பெண்கள், 15 பேர் குழந்தைகள் ஆவார்கள்.

இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1527 ஆக அதிகரித்துள்ளது. 856 பேர் சிகிச்சையில் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் 51 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக கொரோனா பாதிப்பு மையங்கள் மாவட்ட நிர்வாகம் உருவாக்கி வருகிறது.