ஆசாரிபள்ளம் தனிமை முகாமில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் அருகில் உள்ள சுமார் 4 வீடுகளின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கடையில் பரோட்டா பார்சல் வாங்கி செல்லும் வீடியோ தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் 10 பேர் என்ற எண்ணிக்கையில் இருந்த பாதிப்பு, கடந்த சில நாட்களாக, தினமும் 120க்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது. இது மாவட்ட நிர்வாகத்தை மட்டுமின்றி பொதுமக்களையும் பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

கொரோனா பாதித்தவர்களை தனிமைபடுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஆசாரிபள்ளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கொரோனா தொற்று உறுதியான சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இப்படி தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஆசாரிபள்ளம் தனியார் பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் சுவர் ஏறி குதித்து அருகில் உள்ள கடையில் புரோட்டா வாங்கி சென்றதாக தெரிகிறது. இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொதுமக்கள் நேற்று இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே தனியார் பள்ளியில் இருக்கும் கொரோனா நோயாளிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் 150 நோயாளிகளும் முகாமிலேயே இருக்கின்றனர் என்று கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் தனியார் பள்ளி முகாமில் இருந்து சைடு சுவரில் ஏறி ஒருவர் குதித்து வெளியே வந்து மெயின் ரோட்டில் உள்ள கடையில் பரோட்டா பார்சல் வாங்கி செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது. பள்ளியின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதிக்கும்ம் அந்த நபர் அங்குள்ள சுமார் 4 வீடுகளின் காம்பவுண்டுக்குள் புகுந்து வெளியே வருகிறார். பின்னர் பார்சல் வாங்கிவிட்டு, மீண்டும் வந்த வழியே முகாமிற்கு திரும்பி செல்கிறார். இந்த வீடியோ சுமார் 3 நிமிடம் ஓடுகிறது. இது மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.