இந்தியாவில் ரூ.75,000 கோடியை கூகுள் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
"கூகுள் ஃபார் இந்தியா" என்ற நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் பிச்சை, இந்தியாவை மின்னணு மயமாக்குவதற்காக செயல்படுத்தப்படவுள்ள திட்டத்துக்காக இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடியை கூகுள் முதலீடு செய்ய உள்ளது என்று கூறினார். ஒவ்வொரு இந்தியருக்கும் அவரவரின் தாய்மொழியிலேயே மிகவும் எளிமையான முறையில் தகவல்களை கிடைக்கச் செய்வது, சுகாதாரம், கல்வி, வேளாண் துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடியுடன் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை காணொலி மூலமாக உரையாடினார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர், சுந்தர் பிச்சையுடனான உரையாடல் மிகவும் சிறப்பாக, பலனளிக்கும் விதமாக இருந்தது என தெரிவித்துள்ளார். விவசாயிகளும், மாணவர்களும் மெய்நிகர் ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து சுந்தர் பிச்சையிடம் எடுத்துரைத்ததாக பதிவிட்டுள்ளார். இணையவழி கல்வியை விரிவுபடுத்துவது, மின்னணு பணப் பரிவர்த்தனையின் வளர்ச்சி போன்றவை குறித்தும் மோடி பேசினார்.