கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசு அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை முன்னிட்டு நாகர்கோவில், வடசேரி, மார்த்தாண்டம், தக்கலை, கருங்கல், களியக்காவிளை, குளச்சல், திங்கள் நகர், ஆரல்வாய்மொழி, தோவாளை, கன்னியாகுமரி, சுசீந்திரம், கோட்டார், ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, புதுக்கடை, குழித்துறை, கொல்லங்கோடு, நித்திரவிளை, அஞ்சுகிராமம், பார்வதிபுரம், குலசேகரம், திருவட்டார், அருமனை உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள், வடசேரியில் இருந்து மணிமேடை, கோட்டார் சாலை, சுசீந்திரம் கன்னியாகுமரி சாலை, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் சாலை, ஆரல்வாய்மொழி சாலை, பார்வதிபுரம் மார்த்தாண்டம் சாலை வாகனங்கள் இல்லாமல் காலியாகவே இருந்தது. டூவீலர்கள் ரோடுகளில் பார்க்க முடியாத நிலை இருந்து வந்தது. பைக்கில் செல்லும் இளசுகளும் உஷாராகி வீடுகளில் முடங்கி விட்டனர். கிராம பகுதிகளிலும் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என்பதை முன்கூட்டியே அறிவித்து இருந்ததால் மக்கள் உஷாராகி தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி கொண்டனர். இதனால் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படவில்லை என்றே தெரிவித்தனர். மாமிச பிரியர்கள் இறைச்சியை முன்கூட்டியே வாங்கி குளிர்சாதன பெட்டிகளில் வைத்து கொண்டு பயன்படுத்தி கொண்டனர். மக்கள் முழு ஊரடங்கை கடைப்பிடிப்பதற்கு தயாராகவே இருந்தனர்.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை முன்னிட்டு பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என அறிவித்திருந்ததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனால் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல்களை முன்கூட்டியே கூடுதலாக வாங்கி கொண்டனர். வாகனங்களில் செல்பவர்களும் உஷாராக செயல்பட்டனர். பெரும்பாலான பைக் ஓட்டிகள் பெட்ரோல் பங்குகள் செயல்படாததால் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விட்டனர். பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டது தான் வாகனங்கள் முடங்கி மக்களின் வெளி நடமாட்டம் குறைந்ததாக கருத்துக்கள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்ரீநாத் உத்தவுபடி மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகள் , சாலைகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். வடசேரி, வேப்பமூடு ஜங்ஷன், பறக்கை, செட்டிகுளம், கலெக்டர் ஆபீஸ், கோட்டார், ஆசாரிப்பள்ளம், குளச்சல், கருங்கல், பார்வதிபுரம், ஒழுகினசேரி, ஆரல்வாய்மொழி, தக்கலை, இரணியல், மார்த்தாண்டம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.