ஈரான் சிறையில் தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு திரளானவர்கள் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த அந்தோணி அடிமை (வயது 40), ஆரோக்கியபுரத்தை சேர்ந்த ஆன்டணி ஜெபா (37), வாணியக்குடியை சேர்ந்த ஆட்லின் கவுதம் (26), கடலூரை சேர்ந்த சாமி அய்யா (44) ஆகியோர்கள் சவுதி அரேபியாவில் காலித் சவுத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தார்கள். மே மாதம் 20-ந் தேதி மீனவர்கள் வழக்கம்போல் ஜூபைல் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஈரான் கடல் எல்லை தாண்டியதாக ஈரான் நாட்டு கடலோர காவல்படையினர் கைது செய்து ஈரான் நாட்டில் புஷர் என்ற இடத்தில் சிறை வைத்துள்ளார்கள்.

இதே போல ஆரோக்கியபுரத்தை சேர்ந்த கவுதம் (29), சின்ன விளையை சேர்ந்த சாஜு, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காளிமணி மற்றும் மாரி செல்வம் ஆகியோர் சவுதி அரேபிய நாட்டில் அரேபிய முதலாளிக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார்கள். இவர்கள் மே மாதம் 14-ந் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள். 20-ந் தேதி அவர்களை ஈரான் நாட்டு கடலோர காவல்படை கைது செய்தது. அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மீன்பிடிக்க கடலுக்குள் சென்று இருந்த மீனவர்களை மீனைப் பிடிப்பது போல் ஈரான் கடற்படை பிடித்துச் சென்று சிறை வைத்திருப்பது மீனவ மக்களிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று நோயானது ஈரானில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிறையில் இருக்கின்ற மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் மீனவர்களுக்கு கடினமான வேலையை ஈரான் சிறையில் கொடுப்பதாகவும், போதிய உணவு கிடைக்கவில்லை என்றும், உறவினர்களோடு பேசுவதற்கு எந்த வாய்ப்பும் தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே ஈரான் சிறையில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்க, சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்களும் வந்து இருந்தனர்.