குமரி மாவட்டத்தில் அரசு சாா்பில், கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் என்றாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து தமிழுக்கு பெருமை சோ்த்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுத்ததன்பேரில், முதல்வா் எடப்பாடிகே.பழனிசாமி கடந்த 14.2.2019இல் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு அவரது சொந்த ஊரான தேரூரில் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தாா்.

ஆட்சியா் ஆய்வில், தேரூரிலும், புத்தேரியிலும் மணிமண்டபம் கட்டுவதற்கு போதுமான இடம் இல்லை என தெரியவந்ததால், தோவாளையில் மணிமண்டபம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, கடந்த ஜூன் 16 ஆம் தேதி, காணொலி மூலம் முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், மணிமண்டபம் கட்டுதல் குறித்த சிலா் தவறான தகவல்களை பரப்புகின்றனா். அவா்களை மக்கள் நன்கு அறிவா். திட்டமிட்டபடி, விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.