குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ள பச்சிளம் குழந்தையின் தொடர் பாதுகாப்பிற்காக சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை பிராட்வே, முத்தியால்பேட்டை பகுதியில் பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை குப்பைத் தொட்டியில் இருந்து கடந்த 14ம் தேதி காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது.

1.6 கிலோ கிராம் எடையுடன் குறைமாதமாக பிறந்த அக்குழந்தை கிருமிகளால் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அக்குழந்தைக்கு சிறப்பான சிகிச்சையும் தேவையான தடுப்பூசியும் போடப்பட்டது. தாய் ஆதரவற்ற இக்குழந்தைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கி மூலம் பெறப்பட்ட தாய்ப்பால் வழங்கப்பட்டது. தற்போது இக்குழந்தை நோய்த்தொற்று குணமடைந்து எடை சீராகவும், உடல்ஆரோக்கியமாகவும் உள்ளது.

இக்குழந்தையை தொடர் பாதுகாப்பிற்காக மேற்கொண்டு பராமரித்திட சமூக நலத்துறையிடம் உரிய முறையில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அக்குழந்தைக்கு முத்தமிழ்ச்செல்வன் என்று பெயரிட்டு ஒப்படைத்தார்.

இந்த குழந்தை சமூக பாதுகாப்புத்துறை குழந்தை நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு பின்பு கலைச்செல்வி காருண்யா தன்னார்வதொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் திருமதி கலையரசி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி, மற்றும் மருத்துவத் துறை, காவல்துறை மற்றும் சமூக நலத்துறை உயர் அலுவலர்கள் இருந்தனர்.