தக்கலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு முக கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கி இலவசமாக முக கவசங்களை வழங்கினர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் துவங்கி 9 ம் தேதியுடன் 108 நாட்கள் ஆகிறது. வைரஸ் தொற்று துவங்கிய நாள் முதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆலோசனையில் காவல்துறையினர் இரவும் பகலும் தன்னலம் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வாகன விபத்து திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் ஓரளவு தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பின் கொரோனா வைரஸ் தொல்லை அதிகரித்தும் காவல்துறையினரை பாதித்தும் கூட அவர்கள் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தக்கலை சரக டி.எஸ்.பி ராமச்சந்திரன் வழிகாட்டுதலில் தக்கலை போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் டேனியேல் கிருபாகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாய்சன் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பல நாட்களாக அழகியமண்டபம், மணலி சாரோடு, பத்மநாபபுரம் அரண்மனை சாலை, புலியூர்குறிச்சி, குமாரகோவில், கல்குறிச்சி, முத்தலக்குறிச்சி, தக்கலை உட்பட பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் முககவசம் அணியாமல் வரும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முககவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கி முககவசம் இல்லாதவர்களுக்கு இலவசமாக முககவசங்கள் வழங்கி அணிவித்தனர். மேலும், சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.






0 Comments