குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். முட்டம் குருந்தன்கோடு வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் பிரதீப்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மணவாளக்குறிச்சி மார்க்கெட்டில் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் 93 பேரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டது.
இதன் முடிவு நேற்று முன்தினம் மாலை சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முடிவில் முட்டம் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ஒருவர் மற்றும் மார்க்கெட்டில் பெண் மீன் வியாபாரி, கோழி இறைச்சி கடைக்காரர், காய்கறி வியாபாரி மற்றும் பொதுமக்கள் உள்பட 8 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் ஆசாரிப்பள்ளம் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மணவாளக்குறிச்சி சந்திப்பில் உள்ள மார்க்கெட் மூடப்பட்டது.

இதனால் மார்க்கெட் தற்காலிகமாக பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள பேரூந்து நிலையத்தில் செயல்படும் என பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மணவாளக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தொற்று அறியப்பட்ட பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. தவிர இவர்களது தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராம நர்சு ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து முட்டம் ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு நிலையம் மூடப்பட்டது. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சளி மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. முட்டம் சுகாதாரம் நிலையம் மூடப்பட்டதால் மருத்துவர்கள், களப்பணியாளர்கள் வெள்ளிச்சந்தை, குருந்தன்கோடு, சேரமங்கலம் ஆகிய சுகாதார நிலையத்திலிருந்து களப்பணி செய்து வருகின்றனர்.