குமரி மாவட்ட மீனவர்கள் 9 பேர் குவைத்திற்கு மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டியதாக சிறைபிடிக்கக்கப்பட்டு ஈரான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க கோரி உறவினர்கள் நேற்று குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் வசந்தகுமார் எம்பி ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர்.

குமரி மாவட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் காட்வின் ஜாண்வெல்டன் (வயது 40). இவருடன் மிடாலம் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட்ரவி (38), மேல்மிடாலத்தை சேர்ந்த டயனஸ் (40), லீபுரத்தை சேர்ந்த ஜோசப் பெஸ்கி (50), ஜேசுதாஸ் (27), குளச்சல் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த வெலிங்டன் (36) என 9 பேர் சேர்ந்து குவைத் நாட்டில் மீன்பிடி தொழிலுக்காக சென்றனர்.
இவர்கள் வழக்கம் போல் மீன்பிடித்து கொண்டிருந்தபோது கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி ஈரான் கடல் பாதுகாப்பு படை எல்லைதாண்டி வந்ததாக மூன்று குவைத் நாட்டை சேர்ந்த படகுகளை சிறைபிடித்து சென்றதாக தெரிகிறது. மேலும் படகுகளில் இருந்த 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஈரானில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள புஸ்கர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த தகவல் உறவினர்களுக்கு தற்போதுதான் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காட்வின் ஜாண்வெல்டனின் மனைவி நிஷா மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் இன்று காலையில் குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் வசந்தகுமார் எம்பி உள்ளிட்டோரை சந்தித்து ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு வலியுறுத்தினர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வசந்தகுமார் எம்பி உறுதியளித்தார். இது தொடர்பாக நிஷா கூறும்போது, “ எனது கணவர் கைது செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆகிறது. இதனால் நாங்கள் மிகுந்த கவலையில் உள்ளோம். இதனால் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கபப்ட்டுள்ளோம். எனவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு எனது கணவர் உள்ளிட்ட 9 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.






0 Comments