குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை சுமார் 800 ஐ தாண்டி உள்ளது. இந்நிலையில் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல்ஆலையில் பணிபுரியும் கொடுப்பைக்குழியை சேர்ந்த 21 வயது அப்ரண்டிஸ் இளம் தொழிலாளி ஒருவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொற்று உறுதியானது.
அவர் கடந்த 2-ம் தேதி முதல் வேலைக்கு வரவில்லை. அதற்கு முன்பாக அந்த தொழிலாளி உடல் நலக் குறைவினால் அவராகவே மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து குருந்தன்கோடு வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் பிரதீப் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஐ.ஆர்.இ.க்கு சென்று தொழிலாளியின் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வடசேரியை சேர்ந்த ஒரு ஊழியர், பரப்பற்று, மேல குறும்பனையை சேர்ந்த 2 அப்ரண்டிஸ் தொழிலாளர்கள் மற்றும் கணபதிபுரம் தெக்குறிச்சியை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி ஒருவரும் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த 4 பேருக்கும் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. மேலும், ஆலை கேண்டீனை ஒரு வாரம் மூடவும் சுகாதாரத் துறையினர் ஆலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர். இதையடுத்து கேண்டீன் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது. கொடுப்பைக்குழி இளம் தொழிலாளியின் தொடர்பில் இருந்த 4 தொழிலாளர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது போல் இளம் தொழிலாளியின் வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஐ.ஆர்.இ. மணல்ஆலையில் பணி புரியும் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 43 வயது ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதியானதால் அவரும், அவரது மனைவி மற்றும் ஒரு பிள்ளையும் ஆசாரிப்பள்ளத்தில் சேர்க்கப்பட்டனர். இவருக்கு வெளி தொடர்பில் தொற்று வந்ததாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

இதுபோல் மண்டைக்காட்டு அருகே காரியாவிளையை சேர்ந்த 50 வயதான கூலித்தொழிலாளி ஒருவருக்கும் தொற்று உறுதியானதால் தொழிலாளி, மனைவி மற்றும் 3 பிள்ளைகளும் ஆசாரிப்பள்ளத்தில் சேர்க்கப்பட்டனர்.