மணவாளக்குறிச்சி அருகே சுகாதார நிலையப் பெண் பணியாளரிடம் நகை பறிக்க முயன்று தப்பியோடிய இளைஞரை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திங்கள்நகர் அருகே முரசங்கோடு பகுதியை சேர்ந்தவர் சகாய சேவியர் யூஜின் மனைவி மேரி ஸ்டெல்லா (42). இவர் மணவாளக்குறிச்சி அருகே முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். மதியம் வேலை முடிந்து மேரி ஸ்டெல்லா தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

பிள்ளையார்கோவில் - திங்கள்நகர் ரோட்டில் குன்னங்காடு அருகே செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த 20 வயது மதிக்கத்தக்க மர்ம இளைஞன் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறிக்க முயற்சித்தார்.

உடனே அவர் சப்தமிடவே அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இது குறித்து மேரி ஸ்டெல்லா மணவாளக்குறிச்சி போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகாதார நிலையப் பெண் பணியாளரிடம் நகை பறிக்க முயன்ற மர்ம இளைஞரை தேடி வருகின்றனர்.