நாகா்கோவில் அருகே பட்டதாரி பெண்ணை ஏமாற்றி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த இளைஞரிடமிருந்து தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவரது பெற்றோா் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
நாகா்கோவில் அருகே உள்ள வடக்கு கன்னக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த பொன்னுலிங்கம் மகள் சுபா (22). பட்டதாரியான இவா், ஆசிரியா் பயிற்சி படித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மாயமானாா்.

பின்னா், அவா் குமாரகோவில் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் என்ற இளைஞருடன் காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறி தக்கலை காவல் நிலையத்தில் சரணடைந்தனா்.

பின்னா் அவா்கள், தங்களை கொலை செய்யும் நோக்கில் சுபாவின் பெற்றோா் தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா்.

இந்நிலையில் சுபாவின் பெற்றோா் நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: எங்கள் மகளை விக்னேஷ் ஏமாற்றி கடத்திச் சென்றுவிட்டாா். அவா் ஏற்கெனவே பல பெண்களை காதலித்து எமாற்றியுள்ளாா். இப்போது, எங்கள் மகளையும் காதலித்து ஏமாற்றியுள்ளாா். இதுகுறித்து போலீஸில் புகாா் அளித்தும், போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது மகளை மீட்டுத் தரவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.