இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்த ஐசிஎம்ஆர் திட்டமிட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவி அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ள நிலையில், கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

பல நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரொனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதில் குறிப்பிட்ட தடுப்பூசிகள் மனித பரிசோதனைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்த பாரத் பயோடெக் நிறுவனம், மனித பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததாக ஜூன் 30ம் தேதி தெரிவித்தது. மேலும், கொவாக்ஸின் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, ஜூலை மாதம் முதல் மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவெடுத்துள்ளது. அதற்காக நாடு முழுவதும் உள்ள 12 மையங்களில் அந்த தடுப்பூசி மனித சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை துரிதப்படுத்துமாறும், சோதனை வெற்றி பெற்றால் ஆகஸ்ட் 15ம் தேதி மருந்தை அறிமுகப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டு பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பணிகளை முடிந்த அளவு விரைவில் முடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த இன்னொரு இந்திய நிறுவனமான ஸைடஸ் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தும் மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






0 Comments