உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக ஐ.நா.விடம் அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபானி துஜாரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் தனது முடிவை பொதுச் செயலரிடம் அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக கடந்த திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த அமைப்பினுடைய சாசனத்தின் அடிப்படையில், இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் அந்த அறிவிப்பு, திங்கள்கிழமை முதலே அமலுக்கு வருகிறது என்று துஜாரிக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.
கொரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறாா். அந்த தீநுண்மி தொடா்பான பல உண்மைகள் தெரிந்திருந்தும், அவற்றை அமெரிக்காவிடமிருந்து அந்த அமைப்பு மறைத்ததாக அவா் கூறி வருகிறாா்.இந்தச் சூழலில், உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்திவைக்க டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டாா்.
அதன் தொடா்ச்சியாக, 'சீனாவின் பிடியிலிருந்து உலக சுகாதார அமைப்பு இன்னும் 30 நாள்களுக்குள் விடுபடாவிட்டால், அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும்' என்று அவா் கடந்த மே மாதம் 18-ஆம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தாா். மேலும், அந்த அமைப்புடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதாக டிரம்ப் மே மாதம் இறுதியில் அறிவித்தாா். இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பிடமிருந்து விலகுவதாக அமெரிக்கா தற்போது அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.






0 Comments