33 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்துவந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் 51 வயது முதியவர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் முகமது நூருதீன். இவர், கடந்த 1987ம் ஆண்டு முதன்முதலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். எனினும் ஆங்கிலத்தில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அப்போதிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு தேர்வில் பங்கேற்றுவந்துள்ளார். ஆனால், அவரால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை.
ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தின் காவலாளியாக தற்போது வேலை பார்த்துவரும் இவருக்கு மேற்படிப்பு படிக்கவேண்டும் என்று ஏற்பட்ட ஆசை காரணமாக தொடர்ந்து முயற்சிசெய்துவருகிறார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தெலங்கானா அரசு அறிவித்தது. அதனால், தற்போது முகமதுவும் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த அகமது, "ஆங்கிலம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. யாரும் எனக்கு சரியாக உதவி புரியவில்லை. எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதுவேன். ஆனால், தேர்ச்சி பெற முடியவில்லை. தற்போது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பால் நானும் தேர்ச்சி அடைந்துவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கு வேலை தேடி சென்றாலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை கேட்கின்றனர். நான் அடுத்தடுத்து தொடர்ந்து படிக்கவேண்டும். கல்விதான் நல்ல சொத்து. இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிப்பேன்" என்று கூறியுள்ளார்.






0 Comments