உத்தரப்பிரதேசத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரை மருத்துவமனை காவலாளி ஒருவர் எட்டி உதைத்து மிகவும் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு அரசு மருத்துவமனை வாசலில் 80 வயது மூதாட்டி ஒருவர் தங்கிவந்துள்ளார். மருத்துவமனை வாசலில் தங்கி இருந்ததால் அவரை அந்த இடத்தை விட்டு செல்லுமாறு பலமுறை அந்த மருத்துவமனையின் காவலாளி தெரிவித்துள்ளார். எனினும் அந்த மூதாட்டி செல்லாததால் அவரை காலால் எட்டி உதைத்து மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார் அந்த காவலாளி.
வலி தாங்க முடியாமல் மூதாட்டி கதறியும் அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. அந்த சம்பவம் குறித்த வீடியோவை அபை சிங் ரத்தோர் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஏழை மக்களை இப்படித்தான் நடத்தவேண்டுமா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மூதாட்டியை தாக்கிய மருத்துவமனைக் காவலாளியை அப்பகுதி போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த காவலாளியின் பெயர் சஞ்சய் என்பது தெரியவந்துள்ளது. மேலும், மூதாட்டியை அந்த அரசு மருத்துவமனையிலேயே அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், 'ஒருவரின் மன நிலையோ அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதோ முக்கியமல்ல.இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடத்தைகளை பொறுத்துக்கொள்ளும் ஒரு சமூகம் தன்னைப் பற்றி வெட்கப்படவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.






0 Comments