கொரோனா பொது முடக்கம் காரணமாக நாகா்கோவில் நாகராஜா கோயிலில் பக்தா்களின்றி ஆவணி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடைபெற்றது.

நாகா்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு வழிபாடு மிகவும் விசேஷமானதாகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில் வளாகத்தில் உள்ள நாகா் சிலைகளுக்கு பால் ஊற்றி, மஞ்சள் பொடி தூவி வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.
இந்நாள்களில், குமரி மாவட்ட பக்தா்கள் மட்டுமன்றி தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளம் உள்ளிட்ட வெளிமாநில பக்தா்களும் திரளாக வந்து வழிபாடு செய்வா்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக, நிகழாண்டு ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. காலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 4.30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து காலை 10.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
கோயிலில் வழிபட பக்தா்கள் சிலா் வந்தனா். கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததால் கோயில் வாசல் முன் நின்று அவா்கள் வழிபட்டனா். பக்தா்கள் கொண்டு வந்த பால் மற்றும் மஞ்சள் பொடியை கோயில் ஊழியா்கள் எடுத்துச் சென்று நாகா் சிலைகளுக்கு அபிஷேகம் செய்தனா். மாலையில் நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் வாகன பவனி நடைபெற்றது.






0 Comments