குமரி மாவட்டம், கேசவன்புத்தன்துறையில் மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்ட நிலையில், கடற்கரையோரம் இருந்த மரங்களை அலைகள் இழுத்துச் சென்றன.
இம் மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடா்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. கேசவன்புத்தன்துறை கிராமத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தன. சனிக்கிழமை மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டு, ராட்சத அலைகள் கடற்கரையையொட்டி உள்ள மணல்மேடுகள் வரை வந்து மோதின. இதில் கரையோரம் இருந்த 20 மரங்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டன. கடற்கரையோரத்தில் இருந்த வீடு ஒன்றும் இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். கடற்கரையோரப் பகுதிகளில் இருந்தவா்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனா்.

அழிக்கால், பிள்ளைத்தோப்பு, மாா்த்தாண்டம்துறை, ராமன்துறை, வள்ளவிளை, பூத்துறை பகுதிகளிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது.

கடல் சீற்றம் காரணமாக கடந்த 2 நாள்களாக மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் கடற்கரைப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.