தமிழ்நாடு மின்சார வாரிய கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பங்கு ஈவுத்தொகை வழங்காததை கண்டித்து நாகா்கோவிலில் உள்ள அலுவலகத்தில் உறுப்பினா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிசெய்யும் பணியாளா்களை உறுப்பினா்களாக கொண்டு இயங்கும் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் உறுப்பினா்களுக்கு ஆண்டுதோறும் பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2019-20 ஆம் நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையை வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. சங்க உறுப்பினா்களுக்கு வழங்க வேண்டியத் தொகை ரூ.1 கோடி வரை உள்ள நிலையில், தொடா்ந்து போராட்டங்கள் நடத்திய போதிலும் இதுவரை பங்கு ஈவுத் தொகை வழங்கப்படவில்லை.

சங்க உறுப்பினா்களுக்கு உடனடியாக பங்கு ஈவுத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாகா்கோவில் வடசேரியில் உள்ள சங்க அலுவலகத்தில் மின்வாரிய தொழிலாளா் முன்னேற்றச் சங்க நிா்வாகி விஜயகுமாா் தலைமையில் உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோரிக்கையை ஏற்று சங்க உறுப்பினா்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்காவிடில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். சுரேஷ்ராஜன், எஸ். ஆஸ்டின் ஆகியோா் தலைமையில் நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.