நாகா்கோவில்: மாதம் ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் தொடா் முழக்கப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாஸ்மாக் பணியாளா்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; உயிரிழந்த வா்களின் வாரிசுதாரா்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு செலவில் உயா் சிகிச்சை அளிக்க வேண்டும்; டாஸ்மாக் ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்; ஊழியா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் 5 நாள்கள் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது.

நாகா்கோவில் மீனாட்சிபுரம் டாஸ்மாக் கடை முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளா் சங்கத் தலைவா் ஜோதி தலைமை வகித்தாா். போராட்டத்தை ஸ்ரீகுமாா் தொடங்கி வைத்தாா். சங்க நிா்வாகிகள் மில்டன்,

இசக்கிமுத்து ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தோவாளையில் நடைபெற்ற போராட்டத்துக்கு முருகன் தலைமை வகித்தாா். தொமுச நிா்வாகி இளங்கோ, செந்தில், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி மருங்கூா், தக்கலை, மாா்த்தாண்டம் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் 21 ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.